தலைவிக்கு வாடைக் காற்று தரும் துன்பம்

குறுந்தொகை 110, கிள்ளி மங்கலங்கிழார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது அல்லது தோழி தலைவியிடம் சொன்னது
வாரார் ஆயினும் வரினும் அவர் நமக்கு
யார் ஆகியரோ தோழி நீர
நீலப் பைம் போது உளரிப் புதல
பீலி ஒண் பொறிக் கருவிளை ஆட்டி
நுண் முள் ஈங்கைச் செவ் அரும்பு ஊழ்த்த
வண்ணத் துய்ம் மலர் உதிரத் தண்ணென்று
இன்னாது எறி தரும் வாடையொடு
என்னாயினள் கொல் என்னாதோரே.

நற்றிணை 193, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலைவி சொன்னது, வாடைக் காற்றிடம்
அட்டரக்கு உருவின் வட்டு முகை ஈங்கைத்
துய்த் தலைப் புது மலர்த் துளி தலைக் கலாவ
நிறை நீர்ப் புனிற்றுப் புலம் துழைஇ ஆனாய்
இரும் புறம் தழூஉம் பெருந் தண் வாடை
நினக்குத் தீது அறிந்தன்றோ இலமே
பணைத் தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர்
அருஞ் செயல் பொருட் பிணிப் பிரிந்தனராக
யாரும் இல் ஒரு சிறை இருந்து
பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே.

அகநானூறு 294, கழார்க்கீரன் எயிற்றியார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கித்
துள்ளுப் பெயல் கழிந்த பின்றை புகையுறப்
புள்ளி நுண் துவலைப் பூவகம் நிறையக்
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்
நீர்வார் கண்ணின் கருவிளை மலரத்
துய்த்தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை
நெய் தோய்ந்தன்ன நீர் நனை அம் தளிர்
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர
அவரைப் பைம் பூப் பயில அகல் வயல்
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்சக்
சிதர் சினை தூங்கும் அற்சிர அரை நாள்
காய்சின வேந்தன் பாசறை நீடி
நம் நோய் அறியா அறனிலாளர்
இந்நிலை களைய வருகுவர் கொல் என
ஆனாது எறி தரும் வாடையொடு
நோனேன் தோழி என் தனிமையானே.

அகநானூறு 163, கழார்க்கீரன் எயிற்றியார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
விண் அதிர்பு தலைஇய விரவு மலர் குழையத்
தண் மழை பொழிந்த தாழ் பெயல் கடை நாள்
எமியம் ஆகத் துனி உளம் கூரச்
சென்றோர் உள்ளிச் சில் வளை நெகிழப்
பெருநகை உள்ளமொடு வரு நசை நோக்கி
விளியும் எவ்வமொடு அளியள் என்னாது
களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை
முளரி கரியும் முன் பனிப் பானாள்
குன்று நெகிழ்பு அன்ன குளிர் கொள் வாடை
எனக்கே வந்தனை போறி புனல் கால்
அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழக்
கொடியோர் சென்ற தேஎத்து மடியாது
இனையை ஆகிச் செல்மதி
வினை விதுப்புறுநர் உள்ளலும் உண்டே.

நம்மாழ்வார், திருவாய்மொழி, திவ்ய பிரபந்தம் 3876, தலைவி சொன்னது
புது மணம் முகந்து கொண்டு எறியும் ஆலோ
பொங்கு இள வாடை புன் செக்கர் ஆலோ
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம்
கண்ணனில் கொடிது இனி அதனில் உம்பர்
மது மண மல்லிகை மந்தக் கோவை
வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து
அது மணந்து இன் அருள் ஆய்ச்சியர்க்கே
ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்.

நம்மாழ்வார், திருவிருத்தம், திவ்ய பிரபந்தம் 2481, தலைவி சொன்னது
தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது, தண்ணந் துழாய்க்
கினி நெஞ்சமிங்குக் கவர்வது யாமிலம், நீ நடுவே
முனிவஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே,எம்ம தாவி பனிப்பியல்வே?

நம்மாழ்வார், திருவிருத்தம், திவ்ய பிரபந்தம் 2490, தலைவி சொன்னது
தனி வளர் செங்கோல் நடாவு, தழல்வாய் அரசு அவியப்
பனி வளர் செங்கோல் இருள் வீற்றிருந்தது, பார் முழுதும்
துனி வளர் காதல் துழாயைத் துழாவு தண் வாடை தடிந்
இனி வளை காப்பவர், ஆர் எனை ஊழிகள் ஈர்வனவே.

நம்மாழ்வார், திருவிருத்தம், திவ்ய பிரபந்தம் 2518, தலைவி சொன்னது
என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் ஓங்கு அசுரர்
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்
மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே.

திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி, திவ்ய பிரபந்தம் 1953, தலைவி சொன்னது
காரும் வார் பனிக்கடலும் அன்னவன்
தாரும் மார்வமும் கண்ட தண்டமோ
சோரும் மா முகில் துளியினூடு வந்து
ஈர வாடை தான் ஈரும் என்னையே?