வளையல் நெகிழல் 

அகநானூறு, நற்றிணை, கலித்தொகை ஆகிய சங்க நூல்களிலும் தலைவியின் ‘வளையல் நெகிழ்தல்’ பற்றிய பாடல்கள் பல உள்ளன.

ஐங்குறுநூறு 20, ஓரம்போகியார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அறுசில் கால அஞ்சிறைத் தும்பி
நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும்
காம்பு கண்டன்ன தூம்பு உடை வேழத்துத்
துறை நணி ஊரனை உள்ளியென்
இறை ஏர் எல் வளை நெகிழ்பு ஓடும்மே.

ஐங்குறுநூறு 27, ஓரம்போகியார், மருதத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
செந்நெல் அம் செறுவில் கதிர் கொண்டு களவன்
தண் அக மண் அளைச் செல்லும் ஊரற்கு
எல் வளை நெகிழச் சாஅய்
அல்லல் உழப்பது எவன் கொல் அன்னாய்.

ஐங்குறுநூறு 28, ஓரம்போகியார், மருதத் திணை – தோழி செவிலியிடம் சொன்னது
உண் துறை அணங்கிவள் உறை நோய் ஆயின்
தண் சேறு களவன் வரிக்கும் ஊரற்கு
ஒண் தொடி நெகிழச் சாஅய்
மென் தோள் பசப்பது எவன் கொல் அன்னாய்.

ஐங்குறுநூறு 136, அம்மூவனார், நெய்தல் திணை – தலைவி பாணனிடம் சொன்னது
நாணிலை மன்ற பாண நீயே
கோள் நேர் இலங்கு வளை நெகிழ்த்த
கானலம் துறைவற்குச் சொல் உகுப்போயே.

ஐங்குறுநூறு 163, அம்மூவனார், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழித் துவலை ஒலியில் துஞ்சும்
துறைவன் துறந்தெனத் துறந்து என்
இறை ஏர் முன் கை நீக்கிய வளையே.

ஐங்குறுநூறு 165, அம்மூவனார், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை
அறுகழிச் சிறு மீன் ஆர மாந்தும்
துறைவன் சொல்லிய சொல் என்
நிறை ஏர் எல் வளை கொண்டு நின்றதுவே.

ஐங்குறுநூறு 192, அம்மூவனார், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கோடு புலம் கொட்பக் கடல் எழுந்து முழுங்கப்
பாடு இமிழ் பனித்துறையோடு கலம் உகைக்கும்
துறைவன் பிரிந்தென நெகிழ்ந்தன
வீங்கின மாதோ தோழி என் வளையே.

ஐங்குறுநூறு 199, அம்மூவனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கானலம் பெருந்துறைக் கலி திரை திளைக்கும்
வான் உயர் நெடு மணல் ஏறி ஆனாது
காண்கம் வம்மோ தோழி
செறி வளை நெகிழ்த்தோன் எறி கடல் நாடே.

ஐங்குறுநூறு 285, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பின் இருங்கூந்தல் நல் நுதல் குறமகள்
மெல் தினை நுவணை உண்டு தட்டையின்
ஐவனச் சிறு கிளி கடியும் நாட
வீங்கு வளை நெகிழப் பிரிதல்
யாங்கு வல்லுநையோ ஈங்கு இவள் துறந்தே.

ஐங்குறுநூறு 310, ஓதலாந்தையார், பாலைத் திணை  – தோழி தலைவனிடம் சொன்னது
பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல்
இலங்கு வளை மெல் தோள் இழை நிலை நெகிழப்
பிரிதல் வல்லுவை ஆயின்
அரிதே விடலை இவள் ஆய் நுதல் கவினே.

ஐங்குறுநூறு 471, பேயனார், முல்லைத் திணை – தோழி பாணனிடம் சொன்னது
எல் வளை நெகிழ மேனி வாடப்
பல் இதழ் உண்கண் பனி அலைக் கலங்கத்
துறந்தோன் மன்ற மறம் கெழு குருசில்
அது மற்று உணர்ந்தனை போலாய்
இன்னும் வருதி என் அவர் தகவே.

குறுந்தொகை 11, மாமூலனார், பாலைத் திணை – தலைவி தன் நெஞ்சிடம் சொன்னது, தோழி கேட்கும்படியாக
கோடு ஈர் இலங்கு வளை ஞெகிழ நாடொறும்
பாடில கலிழும் கண்ணொடு புலம்பி
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் ஆங்கே
எழு இனி வாழி என் நெஞ்சே முனாஅது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல் வேல் கட்டி நன்னாட்டு உம்பர்
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்
வழி படல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே.

குறுந்தொகை 31, ஆதிமந்தியார், மருதத் திணை – தலைவி சொன்னது
மள்ளர் குழீஇய விழவினானும்
மகளிர் தழீஇய துணங்கையானும்
யாண்டும் காணேன் மாண்தக் கோனை
யானும் ஓர் ஆடுகள மகளே என் கைக்
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த
பீடு கெழு குரிசலும் ஓர் ஆடுகள மகனே.

குறுந்தொகை 50, குன்றியனார், மருதத் திணை – தலைவி தூது வந்தவரிடம் சொன்னது
ஐயவி அன்ன சிறு வீ ஞாழல்
செவ்வீ மருதின் செம்மலொடு தாஅய்த்
துறை அணிந்தன்று அவர் ஊரே இறை இறந்து
இலங்கு வளை ஞெகிழச் சாஅய்ப்
புலம்பு அணிந்தன்று அவர் மணந்த தோளே.

குறுந்தொகை 125, அம்மூவனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
இலங்கு வளை நெகிழச் சாஅய் யானே
உளெனே வாழி தோழி சாரல்
தழை அணி அல்குல் மகளிருள்ளும்
விழவு மேம் பட்ட என் நலனே பழ விறல்
பறை வலம் தப்பிய பைதல் நாரை
திரை தோய் வாங்கு சினை இருக்கும்
தண்ணம் துறைவனொடு கண்மாறின்றே.

குறுந்தொகை 185, மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
நுதல் பசப்பு இவர்ந்து திதலை வாடி
நெடு மென் பணைத்தோள் சாஅய்த் தொடி நெகிழ்ந்து
இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும் எனச்
சொல்லின் எவன் ஆம் தோழி பல் வரிப்
பாம்பு பை அவிழ்ந்தது போலக் கூம்பிக்
கொண்டலின் தொலைந்த ஒண் செங்காந்தள்
கல் மிசைக் கவியும் நாடற்கு என்
நல் மா மேனி அழி படர் நிலையே.

குறுந்தொகை 190, பூதம்புல்லனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நெறி இருங்கதுப்பொடு பெருந்தோள் நீவிச்
செறி வளை நெகிழச் செய் பொருட்கு அகன்றோர்
அறிவர் கொல் வாழி தோழி பொறி வரி
வெஞ்சின அரவின் பைந் தலை துமிய
உரவுரும் உரறும் அரை இருள் நடு நாள்
நல் ஏறு இயங்குதொறு இயம்பும்
பல் ஆன் தொழுவத்து ஒரு மணிக் குரலே.

குறுந்தொகை 239, ஆசிரியர் பெருங்கண்ணனார், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக
தொடி நெகிழ்ந்தனவே தோள் சாயினவே
விடும் நாண் உண்டோ தோழி விடர் முகைச்
சிலம்புடன் கமழும் அலங்கு குலைக் காந்தள்
நறும் தாது ஊதும் குறுஞ்சிறைத் தும்பி
பாம்பு உமிழ் மணியின் தோன்றும்
முந்தூழ் வேலிய மலை கிழவோற்கே.

குறுந்தொகை 252, கிடங்கில் குலபதி நக்கண்ணனார், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த
கொடியனாகிய குன்று கெழு நாடன்
வருவதோர் காலையின் இன் முகம் திரியாது
கடவுள் கற்பின் அவன் எதிர் பேணி
மடவை மன்ற நீ எனக் கடவுபு
துனியல் வாழி தோழி சான்றோர்
புகழும் முன்னர் நாணுப
பழி யாங்கு ஒல்பவோ காணும் காலே.

குறுந்தொகை 289, பெருங்கண்ணனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வளர் பிறை போல வழி வழிப் பெருகி
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு
குழை பிசைந் தனையேம் ஆகிச் சாஅய்
உழையர் அன்மை இன் உழப்பது அன்றியும்
மழையும் தோழி மான்று பட்டன்றே
பட்ட மாரி படாஅக் கண்ணும்
அவர் திறத்து இரங்கும் நம்மினும்
நம் திறத்து இரங்கும் இவ் அழுங்கல் ஊரே.

குறுந்தொகை 303, அம்மூவனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கழி தேர்ந்து அசைஇய கருங் கால் வெண் குருகு
அடை கரைத் தாழைக் குழீஇப் பெருங்கடல்
உடை திரை ஒலியில் துஞ்சும் துறைவ
தொன் நிலை நெகிழ்ந்த வளையல் ஈங்குப்
பசந்தனள் மன் என் தோழி என்னொடும்
இன் இணர்ப் புன்னை அம் புகர் நிழல்
பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே.

குறுந்தொகை 316, தும்பிசேர் கீரனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
ஆய் வளை ஞெகிழவும் அயர்வு மெய் நிறுப்பவும்
நோய் மலி வருத்தம் அன்னை அறியின்
உளெனோ வாழி தோழி விளியாது
உரவுக் கடல் பொருத விரவு மணல் அடை கரை
ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட
ஆய்ந்த அலவன் துன்புறு துனை பரி
ஓங்குவரல் விரி திரை களையும்
துறைவன் சொல்லோ பிற ஆயினவே.

குறுந்தொகை 365, மதுரை நல்வெள்ளியார், குறிஞ்சித் திணை  – தோழி தலைவனிடம் சொன்னது
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ நாளும்
பாடு இல கலிழ்ந்து பனி ஆனாவே
துன் அரு நெடு வரைத் ததும்ப அருவி
தண்ணென் முழவின் இமிழ் இசை காட்டும்
மருங்கில் கொண்ட பலவின்
பெருங்கல் நாட நீ நயந்தோள் கண்ணே.

குறுந்தொகை 371, உறையூர் முதுகூற்றனார், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
கை வளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும்
மை படு சிலம்பின் ஐவனம் வித்தி
அருவியின் விளைக்கும் நாடனொடு
மருவேன் தோழி அது காமமோ பெரிதே.

குறுந்தொகை 377, மோசி கொற்றனார், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
மலர் ஏர் உண்கண் மாண் நலம் தொலைய
வளை ஏர் மென் தோள் ஞெகிழ்ந்ததன் தலையும்
மாற்று ஆகின்றே தோழி ஆற்றலையே
அறிதற்கு அமையா நாடனொடு
செய்து கொண்டது ஓர் சிறு நல் நட்பே.

பெரியாழ்வார் திருமொழி, திவ்ய பிரபந்தம் 257, தலைவி சொன்னது
குன்றெடுத்து ஆ நிரை காத்த பிரான் கோவலனாய்க் குழல் ஊதி ஊதி
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு கலந்துடன் வருவானைத் தெருவில்
கண்டு என்றும் இவனையொப்பாரை நங்காய் கண்டறியேன் ஏடி வந்து காணாய்
ஒன்றும் நில்லா வளை கழன்று துகில் ஏந்திள முலையும் என் வசமல்லவே.

பெரியாழ்வார் திருமொழி, திவ்ய பிரபந்தம் 261, தாய் சொன்னது
சிந்துரப் பொடிக்கொண்டு சென்னியப்பித் திருநாமம் இட்டங்கோர் இலையந்தன்னால்
அந்தரமின்றித் தன்னெறி பங்கியை அழகிய நேத்திரத்தால் அணிந்து
இந்திரன் போல் வரு மாயப் பிள்ளை எதிர்நின்று இனவளை இழவேல் என்ன
சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன் துகிலொடு சரி வளை கழல்கின்றதே.

பெரியாழ்வார் திருமொழி, திவ்ய பிரபந்தம் 262, தாய் சொன்னது
வலங்காதின் மேல் தோன்றிப் பூவணிந்து மல்லிகை வனமாலை மெளவல் மாலை
சிலிங்காரத்தால் குழல் தாழ விட்டுத் தீங்குழல் வாய் மடுத்து ஊதி ஊதி
அலங்காரத்தால் வரு மாயப் பிள்ளை அழகுகண்டு என் மகள் ஆசைப் பட்டு
விலங்கி நில்லாது எதிர் நின்று கண்டீர் வெள் வளை கழன்று மெய்ம் மெலிகின்றதே.

நாச்சியார் திருமொழி, திவ்ய பிரபந்தம் 545, தலைவி சொன்னது
மன்னு பெரும் புகழ் மாதவன் மாமணிவண்ணன் மணிமுடி மைந்தன்
தன்னை உகந்தது காரணமாக என் சங்கு இழக்கும் வழக்குண்டே
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே
பன்னியெப்போதும் இருந்து விரைந்து என் பவள வாயன் வரக் கூவாய்.

நாச்சியார் திருமொழி,திவ்ய பிரபந்தம் 608
எழில் உடைய  அம்மனைமீர்! என் அரங்கத்து இன்னமுதர்
குழல் அழகர், வாயழகர், கண்ணழகர், கொப்பூழில்
எழு கமலப் பூவழகர், எம்மானார் என்னுடைய
கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே!

திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி, திவ்ய பிரபந்தம் 1110
சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தடமுலைக் கணியிலும் தழலாம்,
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் பொரு கடல் புலம்பிலும் புலம்பும்,
மாந்தளிர் மேனி வண்ணமும் பொன்னாம் வளைகளும் இறை நில்லா, என் தன்
ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே.