யானை தந்தத்திலிருந்து முத்து உதிர்தல்

நற்றிணை 202, பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டு
ஒலி பல் முத்தம் ஆர்ப்ப வலி சிறந்து
வன் சுவல் பராரை முருக்கி கன்றொடு
மடப் பிடி தழீஇய தடக் கை வேழம்
தேன் செய் பெருங்கிளை இரிய வேங்கைப்
பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும்
மா மலை விடரகம் கவைஇ காண்வர
கண்டிசின் வாழியோ குறுமகள் நுந்தை
அறுமீன் பயந்த அறம் செய் திங்கள்
செல் சுடர் நெடுங் கொடி போல
பல் பூங் கோங்கம் அணிந்த காடே.

அகநானூறு 282, தொல்கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, அல்லது தலைவி தோழியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக
பெரு மலைச் சிலம்பின் வேட்டம் போகிய
செறி மடை அம்பின் வல் வில் கானவன்
பொருது தொலை யானை வெண்கோடு கொண்டு
நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன்
கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப
வைந் நுதி வால் மருப்பு ஒடிய உக்க
தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு
மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு
சாந்தம் பொறை மரம் ஆக நறைநார்
வேங்கைக் கண்ணியன் இழி தரும் நாடற்கு
இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து
எந்தையும் எதிர்ந்தனன் கொடையே அலர் வாய்
அம்பல் ஊரும் அவனொடு மொழியும்
சாய் இறைத் திரண்ட தோள் பாராட்டி
யாயும் அவனே என்னும் யாமும்
வல்லே வருக வரைந்த நாள் என
நல் இறை மெல் விரல் கூப்பி
இல் உறை கடவுட்கு ஓக்குதும் பலியே.

புறநானூறு 170, பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார், பாடப்பட்டோன்: பிட்டங்கொற்றன், திணை: வாகை, துறை: வல்லாண் முல்லை, தானை மறம்  
மரை பிரித்து உண்ட நெல்லி வேலிப்
பரல் உடை முன்றில் அம் குடிச் சீறூர்
எல் அடிப் படுத்த கல்லாக் காட்சி
வில் உழுது உண்மார் நாப்பண் ஒல்லென
இழி பிறப்பாளன் கருங்கை சிவப்ப
வலி துரந்து சிலைக்கும் வன்கண் கடுந்துடி
புலி துஞ்சு நெடு வரைக் குடிஞையோடு இரட்டும்
மலை கெழு நாடன் கூர் வேல் பிட்டன்
குறு கல் ஓம்புமின் தெவ்விர் அவனே
சிறு கண் யானை வெண்கோடு பயந்த
ஒளி திகழ் முத்தம் விறலியர்க்கு ஈந்து
நார் பிழிக் கொண்ட வெங்கள் தேறல்
பண் அமை நல் யாழ்ப் பாண் கடும்பு அருத்தி
நசைவர்க்கு மென்மை அல்லது பகைவர்க்கு
இரும்பு பயன்படுக்குங் கருங்கைக் கொல்லன்
விசைத்து எறி கூடமொடு பொருஉம்
உலைக்கல் அன்ன வல்லாளன்னே.

பேயாழ்வார், மூன்றாந் திருவந்தாதி, திவ்ய பிரபந்தம் 2326 
புரிந்து மதவேழம் மாப்பிடியோடூடித்,
திரிந்து சினத்தால் பொருது, விரிந்த சீர் வெண்கோட்டு
முத்து உதிர்க்கும் வேங்கடமே, மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை.