மடல் ஏறுதல்

குறுந்தொகை 173, மதுரைக் காஞ்சிப்புலவன், குறிஞ்சித் திணை  – தலைவன் தோழியிடம் சொன்னது
பொன் நேர் ஆவிரைப் புது மலர் மிடைந்த
பன் நூல் மாலைப் பனை படு கலி மாப்
பூண் மணி கறங்க ஏறி நாண் அட்டு
அழி படர் உள் நோய் வழி வழி சிறப்ப
இன்னள் செய்தது இது என முன் நின்று
அவள் பழி நுவலும் இவ்வூர்
ஆங்கு உணர்ந்தமையின் ஈங்கு ஏகுமார் உளெனே.

குறுந்தொகை 182, மடல் பாடிய மாதங்கீரனார், குறிஞ்சித் திணை  – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது, தோழி கேட்கும்படியாக
விழுத்தலைப் பெண்ணை விளையல் மாமடல்
மணி அணி பெருந்தார் மரபின் பூட்டி
வெள் என்பு அணிந்து பிறர் எள்ளத் தோன்றி
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீக்கித்
தெருவின் இயலவும் தருவது கொல்லோ
கலிழ்ந்து அவிர் அசை நடைப் பேதை
மெலிந்திலள் நாம் விடற்கு அமைந்த தூதே.

கலித்தொகை 58, தலைவன் சொன்னது
வார் உறு வணர் ஐம்பால் வணங்கு இறை நெடு மென் தோள்
பேர் எழில் மலர் உண்கண் பிணை எழில் மான் நோக்கின்
கார் எதிர் தளிர் மேனிக் கவின் பெறு சுடர் நுதல்
கூர் எயிற்று முகை வெண் பல் கொடி புரையும் நுசுப்பினாய்
நேர் சிலம்பு அரி ஆர்ப்ப நிரை தொடிக் கை வீசினை
ஆர் உயிர் வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய் கேள்

உளனா என் உயிரை உண்டு உயவு நோய் கைம்மிக
இளமையான் உணராதாய் நின் தவறு இல்லானும்
களைநர் இல் நோய் செய்யும் கவின் அறிந்து அணிந்து தம்
வளமையான் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்

நடை மெலிந்து அயர்வு உறீஇ நாளும் என் நலியும் நோய்
மடமையான் உணராதாய் நின் தவறு இல்லானும்
இடை நில்லாது எய்க்கும் நின் உரு அறிந்து அணிந்து தம்
உடைமையால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்

அல்லல் கூர்ந்து அழிவுற அணங்கு ஆகி அடரும் நோய்
சொல்லினும் அறியாதாய் நின் தவறு இல்லானும்
ஒல்லையே உயிர் வௌவும் உரு அறிந்து அணிந்து தம்
செல்வத்தால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்
என ஆங்கு
ஒறுப்பின் யான் ஒறுப்பது நுமரை யான் மற்று இந் நோய்
பொறுக்கலாம் வரைத்து அன்றிப் பெரிது ஆயின் பொலம் குழாய்
மறுத்து இவ் ஊர் மன்றத்து மடல் ஏறி
நிறுக்குவென் போல்வல் யான் நீ படு பழியே.

திருமங்கை ஆழ்வார், சிறிய திருமடல், திவ்ய பிரபந்தம் 2710
பெருந்தெருவெ ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வாரார் பூம் பெண்ணை மடல்.

திருமங்கை ஆழ்வார், பெரிய திருமடல், திவ்ய பிரபந்தம் 2790
உன்னியுலவா உலகறிய ஊர்வன் நான்,
முன்னி முளைத்து எழுந்தோங்கி ஒளி பரந்த,
மன்னியம் பூம் பெண்ணை மடல்.

நம்மாழ்வார்,திருவிருத்தம், திவ்ய பிரபந்தம் 3371
நாணும் நிறையும் கவர்ந்து, என்னை நல்
நெஞ்சம் கூவிக்கொண்டு,
சேண் உயர் வானத்து இருக்கும்
தேவ பிரான் தன்னை
ஆணை என் தோழீ! உலகு தோறு அலர்
தூற்றி, ஆம்
கோணைகள் செய்து குதிரியாய்
மடல் ஊர்துமே!

நம்மாழ்வார்,திருவிருத்தம், திவ்ய பிரபந்தம் 3372
யாம் மடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப்
பிரான் உடை
தூ மடல் தண் அம் துழாய் மலர் கொண்டு சூடுவோம்,
ஆம் மடம் இன்றி, தெருவுதோறு
அயல் தையலார் நா மடங்காப் பழி தூற்றி,
நாடும் இரைக்கவே!