பந்தும் கழங்கும்

அகநானுறு 17, கயமனார், பாலைத் திணை – மகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது
வளங் கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும்
இளம் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்
உயங்கின்று அன்னை என் மெய் என்று அசைஇ
மயங்கு வியர் பொறித்த நுதலள் தண்ணென
முயங்கினள் வதியும் மன்னே இனியே  5
தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்
நெடுமொழித் தந்தை அருங்கடி நீவி
நொதுமலாளன் நெஞ்சு அறப் பெற்ற என்
சிறு முதுக் குறைவி சிலம்பு ஆர் சீறடி
வல்ல கொல் செல்லத் தாமே கல்லென  10
ஊர் எழுந்தன்ன உருகெழு செலவின்
நீர் இல் அத்தத்து ஆர் இடை மடுத்த
கொடுங் கோல் உமணர் பகடு தெழி தெள் விளி
நெடும் பெருங்குன்றத்து இமிழ் கொள இயம்பும்
கடுங்கதிர் திருகிய வேய் பயில் பிறங்கல்  15
பெருங்களிறு உரிஞ்சிய மண் அரை யாஅத்து
அருஞ்சுரக் கவலைய அதர் படு மருங்கின்
நீள் அரை இலவத்து ஊழ் கழி பல் மலர்
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்
நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி  20
வைகுறு மீனின் தோன்றும்
மை படு மா மலை விலங்கிய சுரனே.

அகநானூறு 49, வண்ணப்புறக் கந்தரத்தனார், பாலைத் திணை மகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது
கிளியும் பந்தும் கழங்கும் வெய்யோள்
அளியும் அன்பும் சாயலும் இயல்பும்
முன் நாள் போலாள் இறீஇயர் என் உயிர் என
கொடும் தொடைக் குழவியொடு வயின் மரத்து யாத்த
கடுங்கண் கறவையின் சிறுபுறம் நோக்கி
குறுக வந்து குவவு நுதல் நீவி
மெல்லெனத் தழீஇயினேனாக என் மகள்
நன்னர் ஆகத்து இடை முலை வியர்ப்ப
பல் கால் முயங்கினள் மன்னே அன்னோ
விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி
வறன் நிழல் அசைஇ வான் புலந்து வருந்திய
மடமான் அசாஇனம் திரங்கு மரல் சுவைக்கும்
காடு உடன் கழிதல் அறியின் தந்தை
அல்கு பதம் மிகுந்த கடியுடை வியன் நகர்
செல்வுழிச் செல்வுழி மெய்ந் நிழல் போல
கோதை ஆயமொடு ஓரை தழீஇத்
தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப அவள்
ஆடு வழி ஆடு வழி அகலேன் மன்னே.

திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி, திவ்ய பிரபந்தம் 1396, தாய் சொன்னது
பந்தோடு கழல் மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள்,
வந்தானோ திருவரங்கன் வாரானோ என்றென்றே வளையும் சோரும்,
சந்தோகன் பௌழியன் ஐந்து அழல் ஓம்பு தைத்திரியன் சாம வேதி,
அந்தோ வந்து என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர்! அறிகிலேனே.

நம்மாழ்வார், திருவாய்மொழி, திவ்ய பிரபந்தம் 3462, தலைவி சொன்னது
மின் இடை மடவார்கள் நின் அருள் சூடுவார் முன்பு நான் அது அஞ்சுவன்,
மன் உடை இலங்கை அரண் காய்ந்த மாயவனே,
உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் இனி அது கொண்டு செய்வது என்,
என்னுடைய பந்தும் சுழலும் தந்து போகு நம்பீ!