தாயின் துன்பம் – உடன்போக்கில் மகள் சென்றதால் தாய் வருந்துகின்றாள்.  பாலை நிலத்தில் கள்வர்கள் இருப்பார்கள் என்று எண்ணி கலங்குகின்றாள்.  

நிரைகோள் உழவர் – பசுக்களை கவரும் கள்வர்கள்

அகநானூறு 63, கருவூர்க் கண்ணம்புல்லனார், பாலைத் திணை – மகட்போக்கிய செவிலித்தாய் தன் மகளான தோழியிடம் சொன்னது
கேளாய் வாழியோ மகளை நின் தோழி
திரு நகர் வரைப்பகம் புலம்ப அவனொடு
பெருமலை இறந்தது நோவேன் நோவல்
கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி
முடங்குதாள் உதைத்த பொலங்கெழு பூழி
பெரும் புலர் விடியல் விரிந்து வெயில் எறிப்பக்
கருந்தாள் மிடற்ற செம்பூழ்ச் சேவல்
சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண்
அஞ்சுவரத் தகுந கானம் நீந்திக்
கன்று காணாது புன்கண்ண செவி சாய்த்து
மன்று நிறை பைதல் கூரப் பல உடன்
கறவை தந்த கடுங்கான் மறவர்
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ
முதுவாய்ப் பெண்டின் செதுகால் குரம்பை
மட மயில் அன்ன என் நடைமெலி பேதை
தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள்
வேட்டக் கள்வர் விசியுறு கடுங்கண்
சேக்கோள் அறையும் தண்ணுமை
கேட்குநள் கொல் எனக் கலுழும் என் நெஞ்சே.

நம்மாழ்வார், திருவிருத்தம், திவ்ய பிரபந்தம் 2514
கொடுங்கால் சிலையர் நிரைகோள் உழவர், கொலையில் வெய்ய
கடுங்கால் இளைஞர் துடி படும் கவ்வைத்து, அரு வினையேன்
நெடுங்காலமும் கண்ணன் நீள் மலர்ப் பாதம் பரவிப் பெற்ற,
தொடுங்கால் ஒசியும் இடை, இளமான் சென்ற சூழ் கடமே.