தலைவியின் பசலை

குறுந்தொகை 27, வெள்ளிவீதியார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே.

குறுந்தொகை 183, ஔவையார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
சென்ற நாட்ட கொன்றையம் பசு வீ
நம் போல் பசக்கும் காலைத் தம் போல்
சிறு தலை பிணையின் தீர்ந்த கோட்டு
இரலை மானையும் காண்பர் கொல் நமரே
புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ் சினை
மென் மயில் எருத்தில் தோன்றும்
கான வைப்பின் புன்புலத்தானே.

குறுந்தொகை 205, உலோச்சனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மின்னுச் செய் கருவிய பெயன் மழை தூங்க
விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்தாங்குப்
பொலம் படைப் பொலிந்த வெண் தேர் ஏறிக்
கலங்கு கடல் துவலை ஆழி நனைப்ப
இனிச் சென்றனனே இடு மணல் சேர்ப்பன்
யாங்கு அறிந்தன்று கொல் தோழி என்
தேங்கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே.

குறுந்தொகை 219, வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார், நெய்தற் திணை – தலைவி சொன்னது, தலைவன் கேட்கும்படியாக
பயப்பு என் மேனி அதுவே நயப்பவர்
நார் இல் நெஞ்சத்து ஆர் இடை அதுவே
செறிவும் சேண் இகந்தன்றே அறிவே
ஆங்கண் செல்கம் எழு என ஈங்கே
வல்லா கூறி இருக்கும் முள் இலைத்
தடவு நிலைத் தாழைச் சேர்ப்பர்க்கு
இடம் மன் தோழி என் நீரிரோன் எனினே.

குறுந்தொகை 399, பரணர், மருதத் திணை – தலைவி சொன்னது
ஊருண் கேணி உண் துறைத் தொக்க
பாசியற்றே பசலை காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழிப் பரத்தலானே.

நற்றிணை 197, நக்கீரர், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
தோளே தொடி நெகிழ்ந்தனவே நுதலே
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே
கண்ணும் தண் பனி வைகின அன்னோ
தெளிந்தனம் மன்ற தேயர் என் உயிர் என
ஆழல் வாழி தோழி நீ நின்
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு
வண்டு படு புது மலர் உண் துறைத் தரீஇய
பெரு மட மகளிர் முன்கைச் சிறு கோல்
பொலந் தொடி போல மின்னி கணங் கொள்
இன் இசை முரசின் இரங்கி மன்னர்
எயில் ஊர் பல் தோல் போலச்
செல் மழை தவழும் அவர் நல் மலை நாட்டே.

நற்றிணை 219, தாயங்கண்ணனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும்
பழ நலம் இழந்து பசலை பாய
இன் உயிர் பெரும் பிறிது ஆயினும் என்னதூஉம்
புலவேன் வாழி தோழி சிறு கால்
அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல்
பெரு மீன் கொள்ளும் சிறு குடிப் பரதவர்
கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர்
முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும்
கானல் அம் பெருந்துறைச் சேர்ப்பன்
தானே யானே புணர்ந்தமாறே.

அகநானூறு 229, மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பகல் செய் பல் கதிர்ப் பருதி அம் செல்வன்
அகல் வாய் வானத்து ஆழ் போழ்ந்தென
நீர் அற வறந்த நிரம்பா நீளிடைக்
கயந்தலைக் குழவிக் கவி உகிர் மடப் பிடி
குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பலவுடன்
பாழூர்க் குரம்பையின் தோன்றும் ஆங்கண்
நெடுஞ்சேண் இடைய குன்றம் போகி
பொய்வலாளர் முயன்று செய் பெரும் பொருள்
நம் இன்று ஆயினும் முடிக வல்லெனப்
பெருந் துனி மேவல் நல்கூர் குறுமகள்
நோய் மலிந்து உகுத்த நொசிவரல் சில் நீர்
பல் இதழ் மழைக் கண் பாவை மாய்ப்பப்
பொன் ஏர் பசலை ஊர்தரப் பொறி வரி
நல் மா மேனி தொலைதல் நோக்கி
இனையல் என்றி தோழி சினைய
பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கின
போது அவிழ் அலரி கொழுதித் தாது அருந்து
அம் தளிர் மா அத்து அலங்கல் மீ மிசைச்
செங்கண் இருங்குயில் நயவரக் கூஉம்
இன் இள வேனிலும் வாரார்.
இன்னே வருதும் எனத் தெளித்தோரே.

திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி, திவ்ய பிரபந்தம் 1110
சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தடமுலைக் கணியிலும் தழலாம்,
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் பொரு கடல் புலம்பிலும் புலம்பும்,
மாந்தளிர் மேனி வண்ணமும் பொன்னாம் வளைகளும் இறை நில்லா, என் தன்
ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே.

திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி, திவ்ய பிரபந்தம் 1113
தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள் தடங்கடல் நுடங்கு எயில் இலங்கை,
வன் குடி மடங்க வாள் அமர் தொலைத்த வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும்,
மின்கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி மென்முலை பொன் பயந்திருந்த,
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே.