தலைவியின் சேயரிக் கண்கள் – தலைவியின் சிவந்த வரியுடைய கண்கள்
குறுந்தொகை 86, வெண்கொற்றனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
சிறை பனி உடைந்த சேயரி மழைக் கண்
பொறை அரு நோயொடு புலம்பு அலைக் கலங்கிப்
பிறரும் கேட்குநர் உளர் கொல் உறை சிறந்து
ஊதை தூற்றம் கூதிர் யாமத்து
ஆன் நுளம்பு உலம்பு தொறு உளம்பும்
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே.
நற்றிணை 16, சிறைக்குடி ஆந்தையார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
புணரின் புணராது பொருளே பொருள் வயின்
பிரியின் புணராது புணர்வே ஆயிடைச்
செல்லினும் செல்லாய் ஆயினும் நல்லதற்கு
உரியை வாழி என் நெஞ்சே பொருளே
வாடாப் பூவின் பொய்கை நாப்பண்
ஓடு மீன் வழியின் கெடுவ யானே
விழுநீர் வியல் அகம் தூணி ஆக
எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும்
கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக் கண்
அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென்
எனைய ஆகுக வாழிய பொருளே.
நற்றிணை 13, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
எழாஅ ஆகலின் எழில் நலம் தொலைய
அழாஅ தீமோ நொதுமலர் தலையே
ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த
பகழி அன்ன சேயரி மழைக் கண்
நல்ல பெருந் தோளோயே கொல்லன்
எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய்
வேங்கை வீ உகும் ஓங்கு மலைக் கட்சி
மயில் அறிபு அறியா மன்னோ
பயில் குரல் கவரும் பைம் புறக் கிளியே.
நற்றிணை 75, மாமூலனார், குறிஞ்சித் திணை – தலைவன் தோழியிடம் சொன்னது
நயன் இன்மையின் பயன் இது என்னாது
பூம் பொறிப் பொலிந்த அழல் உமிழ் அகன் பை
பாம்பு உயிர் அணங்கியாங்கும் ஈங்கு இது
தகாஅது வாழியோ குறுமகள் நகாஅது
உரைமதி உடையும் என் உள்ளம் சாரல்
கொடு வில் கானவன் கோட்டுமா தொலைச்சிப்
பச்சூன் பெய்த பகழி போல
சேயரி பரந்த மா இதழ் மழைக் கண்
உறாஅ நோக்கம் உற்ற என்
பைதல் நெஞ்சம் உய்யுமாறே.
நம்மாழ்வார், திருவிருத்தம், திவ்ய பிரபந்தம் 2479
செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழு நீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ!
முழு நீர் முகில் வண்ணன் கண்ணன் விண் நாட்டவர் மூதுவர் ஆம்
தொழு நீர் இணை அடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே!